குடியரசின் முக்கியக் 'குடி'மகன்
July 23, 2013
கைகால் அசைவினில் நடனங்கள் பலபுரிவான்
பல்கலைக் கூத்தாடி இவனில்லை!
நாவாடும் போக்கிலே நாடாளும் பேச்சாற்றுவான்
மேடைப் பேச்சாளன் இவனில்லை!
ஒட்டிய மண்ணுடன் கிழிந்த சட்டையான்
சண்டைக் காரன் இவனில்லை!
விலகிய ஆடையும் நீச்சல் உடையாக
நீந்தினான் ஆனால் நீர்தானில்லை!
சம்பாத்தியம் இருந்தும் சாக்கடையில் உறக்கம்
எளிமையின் மறுஉருவம் இவனில்லை!
உயிரான குடும்பமுண்டு உயிர்மேலே பயமில்லை
இராணுவ வீரன் இவனில்லை!
வாந்தியும் மயக்கமும் மறதியும், பாதிச்
சிகிச்சையில் வந்தவன் இவனில்லை!
இவன் - பிரதிநிதிகள் பலர்சேர்ந்து உருவாக்கிய
இந்திய நாட்டின் ‘குடி’மகன்!